Wednesday, October 19, 2011

கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு




இசுலாமியர் கருத்து:

ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, “சுவாமி! இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?” என்று கேட்டார்.

அதற்கு வாரியார், “இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே.” என்று கூற “அனைவரும் அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?” என்று கேட்டனர்.

இதனைக் கேட்ட வாரியார், “முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை
” என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.

“எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்” என்று ஒரு இசுலாமிய அன்பர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டதுடன் அதைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு,





இறை வழிபாடும் இறை சேவையும்:
20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கிய பாம்பன் சுவாமிகள் சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான் என்று போற்றப்படுபவர். இவரை சென்னையில் ஒரு கீற்றுக் கொட்டகையில் சந்தித்து ஆசி பெற்ற வாரியார் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்த போது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாக இவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.

வாரியார் சுவாமிகள் வாழ்நாள் முழுவதும் கோயில், பூசை, சொற்பொழிவு என்று ஆன்மிக வழியில் சரியாகச் சென்று கொண்டிருந்தார். ஒருநாள் கூட முருகனுக்குப் பூசை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சு கூட முருகா! முருகா!! என்றுதான் இருந்தது. தனி மனித ஒழுக்கத்தையும், பல நல்ல உபதேசங்களையும் வழங்கிய வாரியார் அதன்படி வாழ்ந்தும் காட்டினார். கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கட்கிழமை) தொடங்கி ஐந்து சோமவாரம் உபவாசம் (உண்ணா நோன்பு) இருந்ததுடன் இவ்விரதத்தை தனக்குத் தெரிந்தவர்கள் அனைவரையும் இருக்கச் செய்தார்.

உலகில் எங்கெங்கு முருகன் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் “வயலூர் எம்பெருமான்…” என்று கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். இது போல் இவரிடம் நினைவுக் குறிப்புக் (ஆட்டோகிராப்) கையெழுத்து வேண்டுவோரிடம், “இரை தேடுவதோடு இறையையும் தேடு
 என்ற வாக்கியத்தையே பெரும்பான்மையாக எழுதிக் கையெழுத்து இடுவார் .

ஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய “நாம் என்ன செய்யவேண்டும்?” என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம். அந்த நூலைப் படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்று. தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார்.

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில் எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்தார். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் இந்த அமைப்பு இன்று வளர்ந்திருப்பதற்குக் காரணம் வாரியார் சுவாமிகள்தான். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் பல நன்கொடைகளைக் கொடுத்திருக்கிறார். இவர் பிறந்த காங்கேயநல்லூரில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார். இன்றும் இவருடைய பெயரால் மேல்நிலைப் பள்ளிகள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக நிறுவியிருப்பதைக் காணலாம்.

வாரியார் சுவாமிகள் ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாரம்பரநாதர் ஆலயச் சுற்றுச்சுவர், சமயபுரம் கோயில், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் போன்ற பல கோயில்கள் இவரது திருப்பணிகளைப் பெற்றிருக்கின்றன.

“இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப் பெருமக்கள் கேட்கிறார்கள். விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம் பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்” என்று இறைவழிபாட்டிற்கான காரணத்தைச் சொன்னார் வாரியார்.


No comments:

Post a Comment