Wednesday, October 5, 2011

இன்று இராமலிங்க வள்ளார் சுவாமிகளின் பிறந்தநாள்:

இன்று இராமலிங்க வள்ளார் சுவாமிகளின் பிறந்தநாள்:



சிவனடியார்கள் கதையை எழுத வேண்டும் என நினைத்த போது என் நினைவுக்கு வந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் திருவருட் பிரகாச வள்ளலார், இரண்டாமவர் காரைக்கால் அம்மையார், மூன்றாமவர் கண்ணப்பர்.
இவர்கள் மூவரும் நினைவுக்கு வர முக்கிய காரணம் ஒன்றுன்று அது,. பசி.
நானும் சபைக்கு மூன்றுமுறை சென்று வந்து இருக்கிறேன் எனபது எனக்கு பெருமையாக இருக்கிறது, சபையில் இரவு நடைபெறும் ஜோதி தரிசனத்தில் பங்கு கொண்டு இருக்கிறேன் மற்றும்  சபையில் இரவு உணவு உட்கொண்டு இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.., 




வள்ளல் பெருமான் பெருமை:
பதவுரை, பொருளுரை தேவைப்படாத எளிமையா பாடல்களை எழுதியவர்.
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்று பாடல்களில் நேர்மறை எண்ணங்களை புகுத்தியவர்.
கருணையின் உச்சமாக, ‘வாடிய பயிரைக் கண்டதும் வாடினேன்’ என்று சொன்னவர்.
ஏனைய நாட்களிலும் பசியாற்றுவித்தல் நடந்தாலும், தைப்பூச திருநாள் அன்று வடலூரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பசியாற்றுவித்தல் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
கோரமான பசியிலிருந்து மனிதனை காக்க சிவன் எடுத்த அவதாரமாகவே வள்ளலாரை சைவர்கள் கருதுகின்றார்கள்.
இராமலிங்க அடிகள் பிறப்பும் வளர்ப்பும்:
தில்லை எனப்படும் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூரில், சைவ தம்பதிகளான இராமையாபிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக அக்டோபர் 5, 1823 ல் பிறந்தார். இயற்பெயர் இராமலிங்கம். சபாபதி, பரசுராமர் என்ற அண்ணன்மார்களும், உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற அக்காமார்களும் உண்டு.
தாங்கள் சாப்பிடும் முன் அடியவர் யாருக்காவது உணவிட்டு மகிழ்வித்தல் சைவர்களின் பண்பு. வள்ளல் பெருமானின் அன்னை சின்னம்மாளும் தினமும் அடியவர்களுக்கு உணவிடுதலை வழக்கமாக கொண்டிருந்தார். நாளும் ஈசனை நினைத்து உருகும் குடும்பம் என்பதால் வள்ளலாருக்கு இளம் பருவத்திலேயே, பிற உயிர்கள் மீது அன்பு செலுத்தும் குணம் இருந்தது.
கல்வி:
மூத்த அண்ணன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார். புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தனர். சபாபதியே, தம்பி ராமலிங்கத்துக்குக் கல்வி கற்பித்தார். பிறகு, தான் பயின்ற காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயில அனுப்பினார்.
ஆசானான முருகன்:
ஒருகட்டத்தில் மீண்டும் சென்னைக்கே வந்த ராமலிங்கம் அடிக்கடி கந்தசாமி கோயிலுக்குச் சென்றார். கந்தகோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சியடைந்தார். இளம்வயதிலேயே இறைவன்மீது பாடல்கள் இயற்றிப் பாடினார்.
பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோயில்களில் சுற்றிவந்த ராமலிங்கத்தை அண்ணன் சபாபதி கண்டித்தார். ஆனால், ராமலிங்கம் அவருக்குக் கட்டுப்படவில்லை. எனவே, அண்ணன் தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் ராமலிங்கத்துக்குச் சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கிய ராமலிங்கம், வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.
ராமலிங்கத்துக்கு வீட்டில் மாடியறை ஒதுக்கப்பட்டது. புத்தகங்களோடு அவர் மாடியறைக்குச் சென்றார். சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சியளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.
ஒன்பது வயதில்:
புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.
அன்றைய தினம் சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார்.
அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.
ராமலிங்கம் தன் பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்துவந்த ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபட்டு வருவது அவர் வழக்கம்.
அன்னையாக வந்தான் அர்த்தநாரி:
ஒரு நாள் வள்ளலார் மிகுந்த பசியோடு திண்ணையில் படுத்திருந்தார். தினம் தினம் அடியார்களுக்கு உணவு படைத்திடும் அன்னையின் குழந்தைக்கு பசியெடுப்பதனால், சிவனே அன்னையாக மாறி உணவு படைத்திட்டான்.
குழந்தைக்கு பசிக்குமேயென உண்மையான அன்னை வந்து உணவு படைக்க, அன்னையே இப்போது தானே உங்கள் கையால் உணவு உண்டேன் என இராமலிங்கம் தடுமாற, வந்தது உயிர்களுக்கெல்லாம் உணவு படைக்கும் ஈசன் என எல்லோருக்கும் புரிந்தது.
முதல் ஜோதி:
பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார்.
ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப்படுத்தி எண்ணெய் நிரப்பிவைக்க மறந்துபோனார்.
அன்றிரவு ராமலிங்கம் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந் தார். விளக்கில் ஒளி மங்கும்போதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!
சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்:
கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865-ஆம் ஆண்டு ராமலிங்கம்
“சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை “சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்” என்று மாற்றியமைத்தார்.
கொள்கைகள்:
கடவுள் ஒருவரே.
கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட வேண்டும்.
சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.
மாமிச உணவை உண்ணக்கூடாது.
ஜாதி, மத வேறுபாடு கூடாது.
பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும்.
பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்புமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
பசியாற்றுவி்த்தல்:
எல்லா உயிர்களுக்கும் பசியாற்றுவிக்கும் ஈசனின் செயலை வள்ளலாரும் செய்ய எண்ணம் கொண்டார்.
கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867|ஆம் ஆண்டு, மே மாதம் 23&ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே “சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை” எனப் பெயர் மாற்றம் செய்தார்..

No comments:

Post a Comment