Tuesday, August 16, 2011

கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு :




தமிழ்த் திருப்பணி:


     வாரியார் சுவாமிகள் நிகழ்த்தி வந்த திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்கள் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி “கைத்தல நிறைகனி’ என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.
சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.
திருப்புகழ் அமிர்தம் என்ற பத்திரிகை பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள தமது வரவாற்றில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார்.
வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார். அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.
 தபால் தலை:
      வாரியார் சுவாமிகளை பெருமைபடுத்தும் நோக்கில் வாரியார் சுவாமி உருவம் பதித்த தபால் தலை வெளிஇட்டது இந்தியஅரசு, 
பெண்களை மதித்தவர்:

        வாரியார் சொற்பொழிவில் கூட்டத்திற்குக் குறைவு இருக்காது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும் விதமாக “மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது” என்று சொல்வதுண்டு. குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாக (இன்சியலாக) போடவேண்டும் என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன் முதலாகச் சொல்லியவரும் வாரியார்தான்.


பெண்கள் குறித்து உயர்வான எண்ணம் கொண்டிருந்த வாரியார் பத்தொன்பதாம் வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கணவன் மனைவியை மதிப்பதே இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாரியார் பல சொற்பொழிவுகளில் மனைவியை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்.

மனைவியிடம் மெத்தென்று பழக வேண்டும். “மலரினும் மெல்லிது காமம்” புஷ்பத்திடம் பழகுவதுபோல் மனைவியிடம் பழக வேண்டும். நான்குபேர் இருக்கும் பொழுது மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிடக் கூடாது. பத்துப் பேருக்கு எதிரே மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டால் மனைவி கூசுவாள். மனைவியிடம் சைகையால் பேச வேண்டும். ஒரு மன்னர் பெருமான். இளம் மனைவி. அவன் மனைவியைப் பார்த்தான். அவள் புரிந்து கொண்டாள். தோழி பார்த்தாள். அவள் கண்ணால் கேட்டாளாம். அதற்கு அவள் கடைக்கண்ணாலே பதில் சொன்னாளாம். இதையெல்லாம் கம்பர் சொல்கின்றார்.

“தாழ நின்ற ததைமலர்க் கையினால்
ஆழி மன்னொரு வனுரைத் தான்அது
வீழி யின்கனி வாயொரு மெல்லியல்
தோழி கண்ணில் கடைக்கண்ணில் சொல்லினாள்.”


தமிழனுடைய நாகரீகம். ஒரு தடவை சொன்னால் போதுமே. என்று தமிழன் நாகரீகத்தைச் சொல்லி, பெண்ணைச் சொல்லி, மனைவியை மதிக்க வலியுறுத்துவார்,

No comments:

Post a Comment