Thursday, August 11, 2011

கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு:

வாரியார் சுவாமிகளுக்கு வள்ளலார் தந்த ரூ.3500 : நாம் தெய்வத்தை தொழுவது சிறப்புக்குரியதா அல்லது மகான்களை வணங்கவது சிறப்புக்குரியதா என பார்க்கும் போது, இறைவனை வணங்குவது எவ்வளவு சிறப்போ அதனினும் சிறப்பு இறைவனுடைய அடியார்களை போற்றுதலும் வணங்குதலும் என்பதை சைவ – வைணவ சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை.
கடலில் பெரிய கல்லை போடுகிறோம் அது உடனே தண்ணீர்க்குள் போய்விடும். அதே கல்லை ஒரு கட்டையின் மேல் வைத்து கடலில் விட்டால் கட்டையோடு அந்த கல்லும் மிதந்துகொண்டு செல்லும் – முழ்காது. அதைபோல்தான் இறைவனை வணங்குபவர்களும் மகான்களையும் வணங்கினால் துன்ப கடலில் நாம் முழ்கிவிடாமல் இருக்க இறைவனின் ஆசி அவர்களின் வேண்டுதலின் மூலமாக சுலபமாக கிடைக்கிறது. முதல் அமைச்சரிடம் ஒரு வேலை நமக்கு ஆக வேண்டும். அவருக்கே ஆயிரத்தெட்டு வேலை. அதனால் முதல் அமைச்சரை உடனே பார்க்க இயலவில்லை. ஆனால் முதல்வரின் செயலாளர் உங்களின் நெருங்கிய நண்பர். அப்புறமென்ன உங்கள் வேலை உடனே ஆகாதா?.
பொதுவாக இறைவன் நேரில் வருவதில்லை. அப்படியே வந்தால் பக்தர்கள் அவரை விடுவதாக இல்லை. எதாவது கடவுளிடம் வரம் கேட்க வேண்டும் என்று ஏனோ தானோ என்று கேட்பார்கள். ஆனால் இப்போது அப்படி இருக்காது. ஒருவேளை கடவுள் நேரில் வந்தால் அவரிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை முன்கூட்டியே உங்கள் செல்போனில் நோட்ஸ் எழுதி வைத்திருப்பீர்கள். பக்தர்கள் விவரமானவர்களாக மாறிவிட்டார்கள்.

ஒருநாள் இறைவன் ஒரு பக்தன் முன்தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். நான் தருகிறேன்.“ என்றார். அந்த பக்தன் ஒரு இளைஞன். ஆனால் அவன் என்ன வரம் கேட்டான் தெரியுமா?, “நான் என் பேரனுடன் தங்கதட்டில் சாப்பிட வேண்டும்.“ என்றான். ஒரு வரத்திலேயே, திருமண வரம். குழந்தை பாக்கியம். பேரனை பார்க்கும் அளவு தீர்க்க ஆயுள். சாகும் வரை வசதியான வாழ்க்கை என வாழ்வதற்கு என்னனென்ன தேவையோ அத்தனையும் ஒரே வரத்தில் இறைவனிடம் கேட்டு பெற்றான்.
இறைவன் சில சமயம் மனித ரூபத்தில் திகழ்கிறார். அந்த மனிதர்களையே மகான்களாக நாம் போற்றுகிறோம். இராமலிங்க வள்ளலாரின் மகிமையை பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், தம் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கூறி இருக்கிறார்.
1941முதல் 1950வரை வடலூர் சத்திய ஞான சபைத்திருப்பணி செய்து கொண்டு இருந்தார் வாரியார் சுவாமிகள். அப்போது அதில் வேலை செய்தவர்களுக்கு ரூ.3500 சம்பளம் கொடுக்க வேண்டும். பணம் இல்லாததால் நகையை அடமானம் வைத்து பணத்தை வேலையாட்களுக்கு தந்தார். இது என்ன சோதனை.? நகை அடமானம் வைக்கும் அளவுக்கா இறைவன் கொண்டு செல்வது? இருந்தாலும் பரவாயில்லை, யாருக்கா செய்கிறோம்? இராமலிங்க வள்ளலாருக்காகதானே இந்த திருப்பணி.“ என்று சமாதானம் கொண்டார். சுவாமிகள்.

ஒருநாள் ஒரு கணவனும் மனைவியும் வந்தார்கள். வள்ளலார் பற்றிய கதாகாலஷேபம் செய்ய வேண்டும் என்றார்கள் அந்த தம்பதியினர்.  வாரியார் சுவாமிகள் யாரிமும், நான் கேட்கும் தட்சணைதான் தர வேண்டும் என்று பிடிவாதமாக கேட்க மாட்டார். எவ்வளவு கிடைத்தாலும் அது முருகன் செயல் என கருதுவார். நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டு சிதம்பரத்திற்கு பக்கத்தில் உள்ள தெம்மூருக்குக்ச் சென்று வள்ளலார் வரலாற்றை பற்றி கூற சென்றார். அந்த ஊரில் பலத்த மழை.
இதனால் சாலையெல்லாம் சேறும் சகதியுமாக இருந்தது. “இது என்ன கொடுமையாக இருக்கிறதே. இப்படி சதசதவென இருந்தால் எப்படி கதாகாலஷேபம் செய்வது?. அப்படியே இருந்தாலும், யார் சேற்றில் உட்காந்திருந்து கேட்பார்கள்? என்ற கவலை வாரியார் சுவாமிகளுக்கு. பக்தர்கள் உட்கார தென்னை ஒலைகீற்றுகளையும் வைக்கோலையும் பரப்பி மக்களை அமர வைத்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர். வள்ளலார் வரலாற்றை சிறப்பாகவும் அழகாகவும் வழங்கினார் வாரியார் சுவாமிகள். நிகழச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
பிறகு நிகழ்ச்சியை நடத்திய தம்பதியினர், ஒரு தட்டில் பழம் – பூ வெற்றிலை – பாக்குடன் வாரியார் சுவாமிகளின் முன்னே வந்து நின்றார்கள். இதை பார்த்த சுவாமிகள், பொதுவாக பழதட்டுடன் வருபவர்கள் 25 ரூபாய்தான் தட்சனை வைப்பார்கள். இது அவர் அனுபவத்தில் கண்ட உண்மை.

அதுபோல்தான் இந்த தம்பதியினரும் வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்துடன் தட்டை வாங்கி பார்த்தார் சுவாமிகள். பார்த்தவுடன் மனதில் மகி்ழ்ச்சி ஏற்பட்டது. அந்த தட்டில் 3500 ரூபாய் இருந்தது.  இதை கண்டு அவர் மனம் நெகிழ்ச்சி கொண்டது. வடலூர் சத்திய ஞான சபைத்திருப்பணி வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க 3500 ரூபாய்க்கு நகையை அடமானம் வைத்தோம். “நான் யாருக்கும் கடன்காரன் இல்லை“ என்று சொல்லும் விதமாக, “எனக்காக அடமானம் வைத்த நகையை மீட்க இந்த பிடி உன் பணம் 3500 ரூபாயை.“ என்று அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளலாரே தன் பக்தர்களாகிய இந்த தம்பதியினர் மூலமாக தந்தனுப்பினார். இல்லை என்றால் எப்படி சரியாக ரூ.3500 தருவார்கள்.? 2500 ரூபாய் தந்திருக்கலாம். 3000 ரூபாய் தந்திருக்கலாம். அப்படியெல்லாம் இல்லாமல் மிகச் சரியாக திருப்பணி செலவு ரூ.3500 தந்தார்கள் என்றால் இது வள்ளலாரின் மகிமையே என்பதை உணர்ந்து வள்ளலாரை போற்றினார் ஸ்ரீ வாரியார் சுவாமிகள்,

2 comments:

 1. Super Anna

  Maruthu
  http://annanthanatarajar.blogspot.com

  ReplyDelete
 2. நன்றி :))

  http://sivasubramaniyaswamy.blogspot.com

  ReplyDelete